Wednesday, 23 November 2016

அடையாளங்கள்..
தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களில், சிலர் சாதாரணமாகவும் சிலர் கோபத்துடனும் சிலர் முரண்பாடுகளுடன் சிலர் விசித்திரமாகவும் இருப்பார்கள்.
அப்படி சந்திக்கும் மனிதர்களில் பலர் மனிதத்தை வலியுறுத்தலாம். அதை வலியுறுத்தும் வழிமுறைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் செய்யலாம். 

ஒரு மனிதர் மதமே வேண்டாம். அதன்பின் சண்டைகளும் இணக்கங்களும் கூட வேண்டாம். மனிதம் வளரும் எனலாம்.

ஒரு மனிதர் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்று மூன்று மதங்களின் அடையாளங்களையும் அணிந்துக்கொண்டு வந்து, தான் மதங்களை ஒற்றுமைபடுத்தி மனிதத்தை வளர்ப்பதாகவும் நம்மிடம் கூறலாம்.

இவற்றிலிருந்து தான் நம்முள்ளும் கேள்விகள் பிறக்கின்றன.  

இத்தனைதான் சமயங்கள் இங்கு என்று எப்படி முடிவு செய்யமுடியும்? சீக்கியம், புத்தம், சமணம் இது எல்லாம் கூட இங்குள்ளவைதானே. பெரிதாய் பின்பற்றும் சமயங்கள் மட்டுமே சமயங்களா. சச்சரவுக்கும் சமாதானத்துக்கும் தகுதியானவையா? மற்றவை எல்லாம் ஒதுக்கப்பட்டவையா? என்னும் கேள்விகள் எழலாம்.

மதங்களை பிடித்து தொங்கிக்கொண்டு, சண்டைகளையும் சமாதானங்களையும் தேடி ஓடுவதைவிட, அவற்றையெல்லாம் விடுத்து கூட மனிதத்தை வளர்க்கலாம் என்பவரிடம், மதத்தால் உண்டான மனம் சார்ந்த நம்பிக்கைகளை எப்படி கைவிடுவது என்று கேள்விகள் வைக்கலாமா? 

அப்போது மதங்களை ஒழிக்க இத்தனை நாள் போராடியவர்கள் நிலை என்ன என்கிற கேள்வியையும் அவர் முன் நாம் வைக்கலாம். 
அதற்கும் பதில் உண்டு. அவர்கள் போராட்டம் மதங்களை ஒழிக்கத்தான். ஐயமில்லை அதில். மதங்களால் உண்டாகும் பிரிவினைகள், வன்முறைகள், மனிதம் மறந்து போதல், வகுப்பு வேறுபாடுகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் இவற்றை வேரறுக்கத்தான் மதங்களை ஒழித்து, மனங்களை இணைக்க நினைத்தார்கள். அமைதியாக மனிதர்கள் தத்தம் கடவுளர்களோடு வாழ்ந்தால் அவற்றை ஒழிக்கும் அவசியம் என்ன இருக்கபோகிறது?

கடவுளர் நம்பிக்கை மனம் சார்ந்தது, அதை விடமுடியாது என்றால், அவற்றை ஒவ்வொருவரும் தன மனதோடு வைத்துக்கொள்ளலாமே. அடுத்தவரோடு எதற்கு மல்லுக்கு நிற்கவேண்டும்? நல்லிணக்கம் என்று எதற்கு இப்படி அடையாளங்களை பூட்டிக்கொள்ளவேண்டும். 

அடையாளங்கள்தான் இந்த சமூகத்தில் மதம் மற்றும் வாழ்வியல் முறைகளை வகுக்கின்றன. 

தாலியும் மெட்டியும் திருமணத்தையும் பூவும் போட்டும் ஆண் துணை இருப்பதை உறுதிபடுத்தியும் பெண் சமூகத்தை அடிமைபடுத்தும் கட்டுக்குள் கொண்டுவருகின்றன.  

மார்பின் குறுக்கே போடப்பட்டிருக்கும் நூலும் சிலுவையும் தலையில் அணிந்திருக்கும் குல்லாயும் எல்லாமுமே இங்கு அடையாளங்கள்தான். பழக்கப்பட்டுவிட்டு காரணத்தினால், அவை இல்லையேல், பாகுபடுத்த இயலாமல் மனித மனம் தடுமாறும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

இவற்றையெல்லாம் தூக்கி எறியாமல், அடுத்தவர்களை கலவரப்படுத்திப் பார்க்காமல் வாழ, மானுடம் இன்னும் பக்குவப்படவேண்டுமோ என்கிற ஐயமும் ஏற்படுகிறது.  

மத அடையாளங்கள் மாற்றப்பட வேண்டியவை அல்ல. அவற்றை பூட்டியிருக்கும் மனங்கள் மாற்றப்படவேண்டியவை. தன் அடையாளம் பெரிதென கொண்டாடும் உவகைகள் கட்டுப்படுத்த வேண்டியவை. உழுது சமன் செய்யப்பட்ட நிலமே விதைத்தலுக்கு உட்படுத்தப்பட முடியும். அங்கும் ஏர் என்கிற அடையாளம் இருக்கிறது. 

அடையாளங்களைத் தொலைக்காமலிருந்து, மனிதத்தை மானுடம் ருசிக்க கொடுப்போம். 


~ அகிலா..

1 comment:

  1. சிந்தனை அருமை சகோதரி... தொடரட்டும்...

    முடிவில் உள்ள வரி மிகவும் சிறப்பு....

    ReplyDelete