Friday, 19 June 2015

இயலாமைசில சமயங்களில் நடுநிலையாய், உண்மையை முகத்திற்கு நேர் போட்டு உடைக்கமுடியாமல், உறவின் பெயரிலோ நட்பின் பெயரிலோ உள்ள அதீத பற்றின் காரணமாய் தடுமாறிவிடுகிறோம். தவறு எனத் தெரிந்தும் அவர்களுக்கு சாதகமாய் பேசிவிட்டு வரும் சூழலை உருவாக்குகிறோம்.

நட்போ, உறவோ தவறை தவறென்று சுட்டும் தைரியம் இல்லாமல், கோழைத்தனமாய் திரும்புகிறோம். அனுபவங்களின் மேல் அமர்ந்திருந்தும், ஊருக்கு உபதேசம் செய்தும் நெருங்கிய உறவில் சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு நிலை வருத்தமே.

இந்த உன் செயல் தவறு எனச் சுட்டும் போது, அவர்களுக்கு ஏற்படும் மனவருத்தம் எண்ணி, அந்த நெருங்கிய உறவோ, நட்போ பிரிந்துவிடும் சாத்தியங்களை நினைத்து, இத்தனை வருடங்களாக கட்டிக் காத்த உறவைக் கருத்தில் கொண்டு, தவறைச் சரி செய்யாமல் வந்துவிடுகிறோம்.

போலித்தனமான முகமூடிக்குள் ஒளிந்து கொண்டு அனுபவமற்று தெரியாமல் அவர்கள் செய்த தவறை நாம் தெரிந்தே செய்கிறோம். நம் முகம் மறைத்த முகமூடிகள் உள்ளே முட்களைக் கொண்டிருக்கும். மனசாட்சியாய் மாறி, நம் முகத்தில் குத்திக் கொண்டேயிருக்கும்.

நம் மேல் என்ன தவறு இருக்கிறது, இது அவர்களின் வாழ்க்கை, நம்மை கேட்டா முடிவு எடுத்தார்கள், இப்போது மட்டும் நாம் அறிவுரை வழங்க என்றெல்லாம் நம் செயலை மறைக்க தோன்றும் சமாதானங்களை, எவ்வாறு மேம்படுத்துவது என்று அடுத்த கட்டத்திற்கு சென்று யோசிக்க தொடங்குவோம். அதுவும் ஒவ்வாமல் ஆகிவிடுகிறது பல நேரங்களில்.

இளரத்தமாய் இருந்த பொழுதுகளில் வீட்டில் வெளியில் என்று எங்கும் தவறை எதிர்த்து நின்ற நம் உருவே விஸ்வரூபமாய் நம் எதிரில் தோன்றும். வயதும் அனுபவமும் சேர்ந்து அவர்கள் நமக்கு இல்லாமல் போய்விடுவார்களோ என்கிற பயமும் சமூகம் அணிவித்த சில பல முகமூடிகளும் நம்மை மாற்றிவிடுகின்றன. உலகோடு ஒட்டி வாழச் சொன்னவர்கள் யார் என்கிற கோபம் மெதுவாய் எட்டிப் பார்க்கிறது.

உடல் நலனுக்காக தினசரி நடைபயிற்சியை பரிந்துரைத்த மருத்துவரிடம் அதை கடைப்பிடிக்க நேரமில்லை என சொல்வதும் நம் இயலாமையே. இயலாமைக்காக நாம் சொல்லும் காரணங்கள் அனைத்துமே போலியாகவும் சுயநலம் சார்ந்ததாகவும் இருக்கின்றன.

தவறை சரி செய்வதற்கு, வயதோ மனமோ அனுபவமோ தேவையில்லை. மனதுள் ஒரு சிறு பொறி தேவை. அந்த பொறியை உணர்வை வயது, அனுபவம் பக்குவப்பட்ட மனது கொண்டு நம்முடன் நெருங்கியிருப்பவர்களுக்கு புரியவைக்கலாம்.

இளவயதில், கோபம் என்னும் சாயலுடன், உரக்க கத்தி தவறை தவறென்று உலகுக்கு உற்றார் பெற்றாருக்கு சொல்லலாம்.
மத்திம வயதில், மட்டுப்பட்ட கோபத்துடன் சற்று தெளிவடைந்த உணர்வுகளுடன் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கலாம்.
முதிர் வயதில், சாவதானமாய் சிலபல உதாரணங்களுடன் எல்லோருக்கும் புரிய வைக்கலாம்.

எந்த பருவத்திலும் தவறை தவறென சுட்டும் தைரியத்தை மட்டும் இழக்காமல் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அது மாய்ந்து போனால், நாமும் மரித்துப் போனதாய் ஆகும். நம்மை உயிர்ப்பாய் வைத்திருக்கும் செயலே அதுதான்.

மாந்தர்கள் பயணப்படும் பாதைகள் வெவ்வேறாகினும் அதில் சந்திக்கும் நிகழ்வுகள், பிரச்சனைகள், அவற்றை அணுகும் முறைகள் அனைத்துமே ஒன்றுதான். அந்த ராஜப்பாட்டையில்தான் நானும் பயணிக்கிறேன். இன்னுமாய் பக்குவப்படவும் உறுதி இழக்காமல் இருக்கவும் வேண்டி நடக்கிறேன்...    2 comments:

  1. // அது மாய்ந்து போனால், நாமும் மரித்துப் போனதாய் ஆகும் // இதை விட என்ன வேண்டும்...?

    ReplyDelete
  2. ji wish you would achieve your goals

    ReplyDelete