Tuesday, 10 February 2015

பொய்யும் மெய்யும்..வாழ்க்கை நமக்கு எதைக் காட்டுகிறதோ அதையே நாம் உண்மையாய் மனதில் ஏற்றுக் கொள்கிறோம். நமக்கு, நமது மனதுக்கு, அறிவுக்கு பிடித்தமற்றவைகளை அல்லாததென கொள்கிறோம். பிடித்தமானவைகளை ஏற்றுக் கொள்வதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் நமது வழக்கமாகிப் போகிறது.  

தினமும் நாம் சந்திக்கும் மனிதர்களுள் நம்மேல் அதிகமாய் பாதிப்பு ஏற்படுத்தும் விஷயம் எதுவென்றால், அது நமக்கு அதிகம் பரிச்சயம் இல்லாதவர்களின் நடவடிக்கையாகத்தான் இருக்கக்கூடும். ஓன்று அவர்கள் கூற்றை முழுமையாய் ஏற்போம். இல்லையென்றால் மறுப்பு விவாதத்தை வைப்போம். அல்லது மறுப்பு எண்ணத்தை மனதில் பதித்து வெளியில் அதை மறைப்போம்.

வாழ்வின் பாதை நமக்கு சிலவற்றை நிஜமாகவும் பலவற்றை நிஜமற்றவையாகவும் காட்டிச் செல்கிறது. அதில் அன்பின் விகிதம் குறைவாகவே பரிமாறப்படுகிறது. மனிதர்கள் சில சுயநலங்களை மனதில் இருத்தியே பழகத் தொடங்குகிறார்கள். அதை நோக்கியே அவர்களின் செயல்களையும் உருவாக்குகிறார்கள். எதிரில் இருப்பவர் அதை எடுத்துக் கொள்ளும் விதம்தான் எதிரில் இருப்பவரின் வாழ்வின் பாதையை நிர்ணயிக்கிறது.

எந்த பாதையும் நமக்கானது மட்டுமல்ல. நம்மோடு பயணிக்க நாம் தேர்ந்தெடுக்கும் மனிதர்களுக்குமானது. கிளை சாலைகளில் பிரிந்து போகும் மனிதர்கள் சில காலங்கள் கழித்து இணையும் சந்தர்ப்பங்கள் வரக்கூடும். அவ்வமயம் அவர்களை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் அவர்கள் சார்ந்த முந்தைய நிகழ்வுகளின் அடிப்படையிலேயே நடைபெறும்.

நம் மன அடுக்குகளில் சேமிக்கப்படும் நினைவுகள் வீசப்பட்ட நிமிடத்தில் நீரின் மேற்பரப்பில் உண்டாகும் அதிர்வுகளை விழுங்கி அமைதியாய் அடக்கம் உறையும் கல்லினது தன்மையுடன் இருக்கும். நீர் சுழலின் போக்கில் அது மேலெழும் பொழுது, காற்றை கிழித்து கரையையும் தொடலாம், மடங்கி மீண்டும் நீரையே சாரலாம். அவ்வாறு நடப்பது அதன் மீளும் சக்தியிலேயே இருக்கிறது. இவ்வழியே நம்மோடு வந்து இணைபவர்களை ஏற்பதும் விலக்குவதும் நடக்கும்.  

இந்த அனுகுதலின் போது, பொய்யான முகங்கள் சுமக்கும் மாந்தர்கள் பண்டமாற்று முறையையே விரும்புவார்கள். அவர்கள் அதை வாழ்வின் நிதர்சனங்கள் என்று பறைசாற்றிக் கொள்கிறார்கள். வெற்றியும் அவர்களிடம் பொய்யாய் பாவனை காட்டிச் செல்லும். அதை நிஜம் என நம்பும் மற்றவர்களும் அந்த பொய் முகங்களைத் தரிக்க தயங்குவதில்லை. இவர்களின் இடையில் வெட்டுண்டு போவது உண்மையான அன்பும் அதை அணிந்து நடக்கும் முகங்களும்.
மெய்யான முகங்களில் பண்டமாற்று முறை இருக்காது. பண்டமாற்று முறை விலக்கப்பட்ட நிதர்சனங்கள் உண்மையைப் பிரதிபலிக்கும். காலம் கடந்தும் அவற்றின் நிஜங்கள் பேசப்படும். நான் என்றும் நிஜத்தின் நிதர்சனங்களுடன் வாழ நினைக்கிறேன்.

முகங்கள் உடுத்தியிருக்கும் இந்த நிதர்சனங்கள் பொய்யென்றும் மெயென்றும் வாழ்வின் பாதையில் இணைந்தே நடைபோடுகின்றன. அவற்றை சுமக்கும் மனிதர்களைப் பாகுபடுத்தி, பிரியும் சந்திப்புகளில், கிளை சாலைகளில், பேரங்கள் பேசும் முகங்களை பயணிக்கவிட்டு மெய் சுமந்து நடக்கத் தொடங்குகிறேன்.  

நீண்டிருக்கும் பாதையில் வெகு தொலைவு நடக்கவேண்டும் நிதர்சனங்களுடன்..     
2 comments:

  1. போலி உள்மனத்திடம் பலிக்காது...!

    ReplyDelete
  2. VAAIMAI ENAPPADUVATHU YATHENIL ......THEEMAI ILAA SOL

    ReplyDelete