Sunday, 23 March 2014

தேடலில்



உலகத்தின் எந்த வேறுபாடுகளுக்காகவும் நான் காத்திருக்கவில்லை. நீரின் மேல் இட்ட கோடு உடனே அழியும். அது கண் விட்டு மறையும் நேரம் கூட காத்திருப்பதில்லை. அதுபோல எந்த வேறுபாடுகளுக்காகவும் நான் விழித்துக் கொண்டிருக்கவில்லை. தோன்றி மறையும் சில மாயங்களில் ஒன்றாகவே சரீரத்தையும் அதனுள் உறைந்திருக்கும் ஆன்மாவையும் காண்கிறேன்.

காத்திருப்புகளை நான் நம்புவதில்லை. புத்தனின் மீதான என் நம்பிக்கை கூட ஒரு வகையில் காத்திருப்பையே காட்டுகிறது. என் வழியில் புத்தனைக் காண விழையும் மனதின் ஆசையை அடக்குகிறேன். அவனின் புத்தமின்றி என்னுள் புத்தம் தேடத் தொடங்கிவிட்டேன்.

தேடலின் தேக்கத்தில் சில நேரங்களில் விழித்துக் கொள்கிறேன். அப்போதும் கூட ஆடைகளின் ஸ்பரிசம் என்னை ஆச்சிரியப்படுத்தவில்லை. உடலின் மீதான அதன் சிறு அழுத்தம் கூட என் உணர்வுக்கு எட்டவில்லை. ஆகவே இந்த உலகின் மீதான என் விலகலைத் தொடர தொடங்குகிறேன்.

மனதின் அலைகள் அதை எதிர்த்தும் அதன் ஆழங்கள் அதை ஏற்றும் கூக்குரலிடுகின்றன. செவி சாய்க்கிறேன் அவற்றின் ஓலங்களுக்கு. வானந்தரத்தின் ஓரமாய் நின்று ஊளையிடும் ஓநாயின் விளிப்பு என் காதுகளில். அதற்கும் செவி சாய்க்கிறேன். ஏற்கும் என் செவிகளுக்கு ஓலங்கள் போதவில்லை. இன்னுமாய் மனது கூக்குரலிடுகிறது என் விலகலை ஏற்காமல்.

மனதின் எதிர் செயல்கள் சில சமயங்களில் சுத்தியும் உளியும் கொண்டு வரையப்படுகிறது. அதை நான் உற்றுப் பார்ப்பதில்லை. அதன் போக்கில் அது வரைந்துக் கொள்ளட்டும் என்று இருந்துவிடுகிறேன். சில சமயங்களில் என்னை மீறிய வியாக்கானங்களை அது பேசக் காண்கிறேன். விசையிட்ட பந்தைப் போல் குதித்துக் காட்டுகிறது.

என்னை இழுத்துச் சென்று கண்ணாடி பிடிக்கிறது கண் முன். அசையா பொருளாய் நான் இருக்கிறேன். என் பிம்பத்தை பிரித்து காட்டுகிறது. முன்றைய தினத்தின் என் வேறுபாடுகளை காட்டிச் சிரிக்கிறது. இன்னும் அசையா நிற்கிறேன். இன்னும் எத்தனை தினம் என்பது போல் கொக்கரிக்கிறது. என் புத்தம் என்னுள் உருப்பெறுகிறது. கண்ணாடி உடைகிறது. நான் இன்னுமாய் அசையாதும் உடையாதும் நிற்கிறேன்.     


4 comments:

  1. விலகிப் பார்ப்பதற்கும், விளங்கிப் பார்ப்பதற்கும் ஆன வேறுபாடு விழித்திருப்பதற்கான விடியலை நோக்கி நகர்த்தும்... நகர்த்தும் நாடகங்களில் நடிகராய் நடித்திருப்போம் ...

    தேடலில் தேடல்..
    அன்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies


    1. மனதின் எதிர் செயல்கள் சில சமயங்களில் சுத்தியும் உளியும் கொண்டு வரையப்படுகிறது. அதை நான் உற்றுப் பார்ப்பதில்லை. அதன் போக்கில் அது வரைந்துக் கொள்ளட்டும் என்று இருந்துவிடுகிறேன். சில சமயங்களில் என்னை மீறிய வியாக்கானங்களை அது பேசக் காண்கிறேன். விசையிட்ட பந்தைப் போல் குதித்துக் காட்டுகிறது. // மிக அருமையான சிந்தனை. இதயப்பூர்வமான வாழ்த்துக்களும் மனம்திறந்த பாராட்டுக்களும்.

      Delete
    2. உங்களின் புரிதலுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா...

      Delete